யார் பீமன்?

வணக்கம்!

மஹாபாரதம் அனைவருக்கும் பிடித்த பாரத நாட்டின் இதிகாசங்களில் ஒன்று, பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான பீமசேனன் (எ) பீமன். அவன் யார்? என்று கேட்டால் அனைவருக்கும் தெரிந்த பதில் குந்தியின் மகன்!

பீமனின் சிறப்பு அது மட்டும் இல்லை…

அவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் மகன். அஞ்சிலே (பாஞ்ச பூதங்கள்) ஒன்றை (வாயு) பெற்ற அனுமனின் தம்பி. ஒருமுறை துரியோதனன் விஷம் வைத்து நதியில் தள்ளிய போது நாகலோக அரசனிடம் இருந்து 8000 யானை பலத்துடன் சாவில் இருந்து மீண்டு வந்தவன்.

குருச்சேத்திர போரில் முக்கியமான ‘கதா’நாயகன் (கதா – கதையில் நாயகன் மற்றும் கதை என்ற ஆயுதம் கொண்ட நாயகன்). குபேரனின் வனத்தில் அசுர தேவர்களை பந்தாடியவன்.

எதிரியே போற்றும் அளவு வல்லமை படைத்தவன். பதின்மூன்றாம் போர் சருகத்தின் பொது பீமன் தன் எதிரியான துரியோதனன் படையை நோக்கி வரும்போது துரியோதனன் அவனுடைய படைகளை பார்த்து எச்சரித்தான்.

நபமுகின்மு ழங்கி யேறி யிடிவிட நடுநடுந டுங்கி மாயு மர
வென,
வுபரியெழு கின்ற சீயம் வரவர வுடையுமிப சங்க மோடு
வனவென,
வபிமனொரு வன்கை யேவி னமபடை யடையநெளி
கின்ற தாய பொழுதினில்,
விபினமிசை மண்டு தீயொ டனிலமும்விரவுமியல் பந்த
வீம னணுகிலே.

வில்லிபுத்ரர்

உரை:
நபம் – ஆகாயம், முகில் – மேகம், முழங்கி
ஆராவரித்து, ஏறி -மேல்நின்று, இடிவிட – இடியிடித்தலால், நடுநடுநடுங்கி – அளவில்லாத அச்சங்கொண்டு, மாயு – பாம்புகள், மரவென – மறைந்தது போலவும், உபரி எழுகின்ற – மேலே பாயுந்தன்மையுள்ள, சீயம் – சிங்கம், வரவர – அடுத்தவருதலால், உடையும் – வலிமை குலைகிற, இப சங்கம் – யானைக்கூட்டங்கள், ஓடுவன என – ஓடுபவைபோலவும், அபிமன் ஒருவன் கை ஏவின் –  அபிமந்யு ஒருத்தனது கையம்புகளால், நம படை அடைய – நம்முடைய சேனை முழுவதும், நெளிகின்றது ஆய – மிகவருந்துகிறதான, பொழுதில் – இச்சமயத்தில், அந்த வீமன் அணுகில் – அந்த வீமசேனனும் (அவனுக்குத்
துணையாகநெருங்கிச்) சேர்ந்தால், (அது), விபினம்மிசை மண்டு தீயோடு – காட்டிற் பற்றியெரிகிற நெருப்புடளே, அணிலம்உம் விரவும் – காற்றுங் கலக்கிற, இயல்பு – தன்மையாம்;

பொருள்:

மழை வருவதற்கு முன் வானில் கருப்பு மேகம் ஆரவாரத்துடன் ஒன்று சேர்ந்து இடி இடித்தால் அந்த சத்தம் கேட்டு பாம்புகள் மர இடுக்குகளில் நடுங்கி பயந்து ஒளித்து கொள்ளும்… அது போல பீமனின் வருகை இருந்தது மேலும் சீறிப்பாயும் சிங்க கர்ஜனையை கண்டு பயந்து ஓடும் யானை கூட்டங்கள் போல, பீமனின் கர்ஜனை துரியோதனனின் படையை நடுங்கி பின் வாங்க செய்தது… மேலும் வில்லுடன் வரும் அபிமன்யுவை கண்டு பயந்த சமயத்தில் பீமனும் அபிமன்யுவுடன் சேர்ந்து கொண்டான் அது காட்டு தீயின் இடையே பாயும் காற்றை போல இருந்தது.

அத்தகைய சிறப்புடையவன் பீமசேனன்…

Exit mobile version